இடி மின்னலுக்கிடையே எழுந்த தமிழிசை

மு.வி. சோமசுந்தரம்

போற்றி! போற்றி!

போய் உங்கள் செந்தமிழின்

பெருமையினைப் புதைப்பீரோ,

பாடகர்காள் தோயும் தேன் நிகர் தமிழாற்

பாடாமே தெலுங்கிசையைச் சொல்லிப் பிச்சை ஈயுங்கள் என்பீரோ?

செந்தமிழில் இசைப்பாடல்

இல்லையெனச் செப்புகின்றீர், மானமின்றி

புரட்சிக் கவிஞர் கொதித்துக் குமுறு கிறார். மானங்கெட்டவரே என்று சாடுகிறார். தமிழிசைக்கு ஏதோ பெரிய இழுக்கு ஏற்பட்டதை எரிமலையாக எச்சரிக்கை விடவேண்டிய அவசியம் என்ன? அவசியம் இல்லாமலா அனல் மொழியைப் மொழிவார்?

அறிவதற்கும் மிகவும் இலேசுடையதாய்

பாடுதற்கும் துதித்ததற்கும் மிகவும் இனிமையுடையதாய்

சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்

திருவருள் பலத்ததாற் கிடைத்த தென்மொழி யொன்றினடத்தே மனம் பற்றச் செய்து

அத்தென்மொழியால் பல்வகைத் தோத்திரப்

பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்!

மென்மை உள்ளம் கொண்ட வள்ளலார், நெஞ்சம் நெகிழ்ந்து தஞ்சை மண்ணுக்கு எனத் தனித்தன்மை கொண்ட தமிழிசையின் வலிமையை தன்னடக்கத்தோடு கூறி தடுமாறிப்-போகும் தமிழர்களைத் தட்டி எழுப்புகிறார்.

பாவேந்தரும், வள்ளலாரும் கூறுவதை அச்சமின்றி துச்சமாகக் கருதி, தமிழிசைக்குரிய இடத்தைப் பறித்து புதைகுழியில் தள்ள பூணூல் மேனியர் எப்படி செயல்பட்டனர் என்பதை நீங்கள் அறியவேண்டாமா? ஆத்திரம் தேவை-யில்லை. வரலாற்றை அறிவோம். அறியச் செய்வோம். இந்து தந்த என்கோர் (ENCORE) கட்டுரை

50,60 ஆண்டுகளுக்கு முன் நாடகங்-கள் பார்த்தவர்கள் சொல்வார்கள். தியாகராஜ பாகவதர், P.U. சின்னப்பா, கே.பி. சுந்தராம்பாள், T.R. மகாலிங்கம். போன்றோர் நாடகத்தில் பாடிய பாட்டுகளை மீண்டும் பாடும்படி ஒன்ஸ்மோர் (Once More) என்று கூச்சலிட்டு மீண்டும் பாடவைப்பர். அந்த முறையில் 1941 ஆம் ஆண்டு நடந்த, தமிழிசை பற்றி எழுந்த பிரச்சினையைப் பற்றிய வரலாற்று பின்னணியை 25.8.2006 தி இந்து இதழ் இணைப்புப் பகுதியில், “Tressal over Tamil’’ என்ற ஒன்ஸ்மோர் முறையில் நல்லபல சூடேற்றும் கருத்துகளைக் கொண்ட கட்டுரை வெளிச்சத்திற்குச் செல்வோம். பாவேந்தர் சொற்கள் எத்தகைய செல்லுபடியாகக் கூடியவை என்பதை சிந்தையில் கொள்வோம். தி இந்து இதழுக்கு நம் நன்றியையும் சொல்லுவோம்.

தஞ்சாவூர் கர்நாடக இசையின் பிறப்பிடம். இதயம். கர்நாடக இசை என்ற சொல்லைப்பற்றிய ஒரு செய்தி. வாத்ஸ்யாயனாவின் காமசூத்திரத்தில் இந்த சொல் வருகிறது சமஸ்கிருத, கன்னட மொழியுடன் தொடர்புடையது இச் சொல். கர்னா என்றால் காது. அடகா என்றால் நகர்ந்து செல்லுதல், அலைதல். அதாவது காதைநோக்கி நகர்ந்து சொல்லுதல் என்று சொல்லப்படுகிறது.

கரும்பு தந்த தீஞ்சாறே,

கனி தந்த நறுஞ்சுளையே,

கவின் சொல்முல்லை,

அரும்பு தந்த செந்தமிழே

இந்த நம் செந்தமிழ் 1940 வரை இசை மேடைகளில் தேன்வந்து பாயுது காதினிலே என்று கூறும்படி இடம் பெறவில்லை. தெலுங்கு, சமஸ்கிருதப் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டன.

செண்டிகேட் தீர்மானம்

தமிழ்ப் பாடல்களுக்கு ஊக்கம் இது 28.7.1941 இந்து வின் தலைப்பு. செய்தி: அண்ணாமலைப் பல்கலைக்கழக செண்டிகேட், தமிழிசையை ஊக்குவிக்க தமிழ்ப் பாடல் இயற்றுவதையும் , பழைய பாடல்களை பரவலாக பயன்படுத்துவதையும் ஏற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழிசையை இப்பகுதியில் ஆதரிக்கும் ஆர்வலர்-களின் மாநாடு ஒன்று ஆகஸ்ட் மாதத்-தில் நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்-டில் பாடப்படும் பாடல்கள் அனைத்தும் தமிழ்ப்பாடல்களாகவே இருக்கும். இந்தச் செய்தியை மீண்டும் படியுங்கள். அன்றய காலகட்டத்தை கண்-ணாடியில் காட்டுவதை உணர-முடியும்.

நாட்டில் இயக்கும் நெஞ்சுடையார்

துறைதோறும் நின்னெழிலைக் கெடுக்கப்

பாடுபடல் தன்னை நினைக்கையிலே

நெஞ்சு பதைக்கும் பகர வாய்பதைக்கும்

பாவேந்தர் பதைப்பை, உணர்ந்ததின் வெளிப்பாடே அண்ணாமலை நகர் சிண்டிகேட்டின் முடிவும் தீர்மானமும். இசைக்கு தஞ்சை என்றால் நம் இன உணர்வின் ஊற்றுக்கண் அண்ணா-மலை நகர் இது உண்மை.

தமிழிசை மாநாடு

தீர்மானம் இயற்றப்பட்டவுடன், பல்கலைக் கழக முதல்வர் ஏற்பாட்டை செய்யவேண்டுமல்லவா-? செய்யவேண் டிய கட்டாயம் ஏற்பட்டது இசைக் கல்லூரி முதல்வர் டைகர் வரதாச்-சாரிக்கு 14.8.1941 இல் நடைபெற இருக்-கும் தமிழிசை மாநாடு பற்றி 3.8.1941 இல், மாநாட்டில் பல இசை மேதைகள் பங்கேற்பர் என்ற செய்தியை இந்து இதழ் மூலம் அறிவிக்கிறார்.

14.8.1941 இல் நடந்த மாநாட்டு நிகழ்ச்சிபற்றி (15.8.41) இந்து நிருபர் செய்தி அளிக்கிறார்:-_

மாநாடு மிக உற்சாகத்துடன் துவங்-கியது. திரு. கூர்ம வெங்கட்ட ரெட்டி மாநாட்டைத் துவக்கிவைத்தார். அரியக்-குடி ராமானுஜ அய்யங்காரும் அவரைத் தொடர்ந்து கும்பகோணம் ராஜ-மாணிக்கம் பிள்ளை, பழனி சுப்பிர-மணியபிள்ளை கச்சேரி செய்தனர்.

பகல் 1 மணிக்கு மாநாட்டுப் பொருள் விவாதக் கூட்டம் லட்சு-மணப்பிள்ளை தலைமையில் நடந்தது. கர்நாட்டிக் இசையில் ஈடுபாடு கொண்ட பலர் குழுமியிருந்தனர். ஹரிகேசவ முத்தைய பாகதவர் கூட்டத்-தில் முதன்மை இடத்தை வகித்தார். இறுதியாகத் தமிழிசை, தமிழ்ப்-பாடல்கள் சிறப்புப்பற்றிய உரையுடன் முடிந்தது.

மாநாடு 17.8.1941இல் நிறைவடைந்-தது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி தி இந்து இதழ் மாநாட்டுத் தீர்மானங்களை வெளி-இடுகிறது. தீர்மானம் எண் 2 மாநாட்டு முத்தாய்ப்பு வைப்பதுபோல் அமைந்-திருந்தது. இயற்றப்பட்ட 3 தீப்பொறித் தீர்மானம்.

தீர்மானங்களில் 2ஆவது தீர்மானம் கருத்து மாறுபாடு என்ற தீப்பொறியை வெளிப்படுத்தியது. இந்த கட்டத்தில்-தான், பார்ப்பனர்கள் பதைத்துப்போய், படமெடுக்கவும் பக்கபலம் தேடவும் முனைந்தனர். குத்தூசி குருசாமியால் பெயர் வைக்கப்பட்ட மவுண்ட்ரோட் மகாவிஷ்ணும்தன் சக்தி சக்கரத்தை சுழற்றத் துவங்கியது. அந்த தீர்மானம்.

சங்கீத சபாக்கள் ஏற்பாடு செய்யும் கச்சேரிகள் தமிழ்ப்பாடல்கள் பாடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். கச்சேரியின் குறுகிய அளவு நேரத்திற்கு மட்டில் மற்ற மொழிப்பாடல்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் தமிழ்நாட்டில் தமிழில் பாடவேண்டும் என்று சொல்ல, மாநாட்டுத் தீர்மானம், தேவைப்பட்டது என்பது நமக்குத் தலைகுனிவல்லவா?

விடுவார்களா அவர்கள்? பல இசைப் பிரியர்களும், பாடகர்களும் என்ன கூறினார்கள்? இந்த தீர்மானம். கர்னாடக இசையின் மும்மூர்த்திகளின் பாடல்களுக்கும், பல பாடல் இயற்-றுபவர் பாடல்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும் என்ற ஏக்-கத்தை வெளிப்படுத்தினர். (இவர்கள் குறிப்பிடும் மும்மூர்த்திகள் : சிறீ தியாகராஜர், சீறி சாமா சாஸ்திரி, சீறி முத்துசாமி தீட்சிதர். தமிழுலக மும்-மூர்த்திகளான மாரிமுத்தா பிள்ளை, முத்துத்தாண்டவர், அருணாசல கவிராயர் ஆகியோரை இவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அவாள் மூவர்களுக்கு, அவர்கள் வாழ்ந்த திருவாரூரில் உள்ள வீடுகளைத் தேடிப் பிடித்து நினைவுச் சின்னம் அமைக்க 1956இல் ஒரு குழுவே அரசின் சார்பில் அமைக்கப்பட்டது.

சண்டைச் சேவல் இந்து

சண்டைச் சேவல் ஆவேசத்துடன், நஞ்சை கக்கும் விதத்தில் 2.9.1941 இல் தலையங்கம் தீட்டி போர்க்களத்தில் இந்து இதழ் இறங்கியது _ நையாண்டி பாணியில், கொம்பு சீவிடும் வகையில் போர்க்குண இசைப்பற்று (Musical Chauvinism) என்ற தலைப்பைக் கொடுத்தது. தலையங்கத்தில் எழுதியது:

இசைக்குப் பாதுகாப்பு என்ற கருத்துக்கு இடமேயில்லை. தமிழ்ப்-பாடல்களை மட்டில் பாட கட்டாயப்-படுத்தும் முறையில் தமிழ்ப்பாடல் இயற்றுவோரை ஊக்குவிக்கமுடியும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அவர்கள் பாடல்கள் இயற்ற தேவைப்-படும் கற்பனை வள ஆற்றல் எந்த-வகையில் உருப்பெறுகிறது என்பதை சிறிதும் அறியாதவர்கள்

கடிதக் குவியல்

இந்து அடி எடுத்துக் கொடுக்க, அய்யர், அய்யங்கார் தொடை தட்டி கடிதம் எழுதிக் குவித்தனர். எம்.எஸ். ராமசாமி அய்யர், திவான்பகதூர் ராமசாமி சாஸ்திரிகள், டி.டி.கிருஷ்ண-மாச்சாரி (முந்த்ரா ஊழல் வழக்கு நினைவுக்கு வருகிறது) மைலாப்பூர் சுந்தரம் அய்யர் (S. ராஜம், S. பாலச்சந்தர் தந்தையார்), பல்வேறு கோணங்களில் கருத்துகளை கடிதத்தில் எழுதினர். இவர்களுக்கு விளக்கம் கூறும் பொறுப்பு அண்ணா-மலை நகர் இசைக்கல்லூரி முதல்-வருக்கு உண்டல்லவா? அந்த வகை-யில் ஒரு வேடிக்கையான விளக்கத்தை 6.9.1941 இல் கடிதம் வாயிலாக இந்துக்கு அனுப்புகிறார். முதல்வர் டைகர் வரதாச்-சாரியின் விளக்கமாவது: தெலுங்கு பேசிவந்த தஞ்சாவூர் அரசர்களின் தாராள மனப்பான்மை ஆதரவு, உதவியால் சிறந்த தமிழ்ப் பாடலாசிரியர்கள் தெலுங்கில் பாடல் இயற்றினார்கள். காசுக்கு மாரடிப்பது என்பார்களே, அதுபோல், சிறந்த தமிழ்ப் பாடலாசிரியர்கள் தங்களை தெலுங்குக்கு அடகு வைத்து-விட்டார்கள் என்று கூறி அவர்களுக்கு இழிவைத்தான் தேடிந்தந்தார் டைகர். எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்று பறை சாற்றிய பாவேந்தர் உணர்வு மடிந்து போயிற்றே?

சத்தற்ற உன் விளக்கம் எங்கள் கேள்வியை சந்திக்கும் வகையில் இல்லை என்று கூறும் வகையில் இந்து மறு-தலை விடுகிறது. வரதாச்சாரியார் பதில் நாங்கள் எழுப்பிய கருத்துக்கு சிறிது கூட பதிலளிக்கும் வகையில் இல்லை

இந்துக் கூட்டத்துக்கு தூக்கம் வருமா?

8.9.1941 இந்து இதழில், முதல் நாள் நடந்த கூட்டம் ஒன்றைப் பற்றிய செய்தியை வெளியிடுகிறது. அந்தக் கூட்டம் மைலாப்பூர் தியாகராஜ சங்கீத வித்யாத் சமாஜம் அரங்கில் நடை-பெற்றது. கூட்டத்துக்கு T.L வெங்கட்-ராம அய்யர் தலைமை வகித்தார். பாரூர் சுந்தரம் அய்யர், C.S. அய்யர் ஆகியோர் அண்ணாமலை நகர் தீர்மானம் எண் 2 அய் எதிர்த்துப் பேசினார்கள்.

10.9.1941 இல் வயலின் வித்வான் மருங்காபுரி கோபாலகிருஷ்ண அய்யரை பாராட்ட ஒரு கூட்டம் நடந்தது. அதில் திவான்பகதூர் K.S. ராமசாமி சாஸ்திரிகள் பேசும்போது அண்ணாமலை நகர் தீர்மானத்தை முழுமூச்சாக எதிர்த்துப் பேசியதாக இந்து நிருபர் அறிவித்துள்ளார்.

எதிர்ப்புக்கு மறுப்பு ஏறத்தாழ 2 மாத காலத்துக்கு அண்ணாமலை நகர் சிண்டிகேட் இயற்றிய தீர்மானத்தை எதிர்த்து அக்கிரகாரம் ஓயாது கூட்டங்கள் மூலம் கூச்சல்போட்டு வந்தது. அவர்கள் எதிர்ப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகத்து நாடகத் தந்தை என்று போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் 16.9.41இல் சென்னை விக்டோரியா பொது மன்றத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில் பங்கேற்றவர்களில் குறிப்பிட்டத்தக்க-வர்கள் வி.ரி. தியாகராஜ பாகவதர், தஞ்-சாவூர் பொன்னையா பிள்ளை ஆவார்கள். அவர்கள் அனைவரும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார்கள். இதே நேரத்தில் தெலுங்குபேசும் பகுதியான காக்கிநாடாவில் ஒரு கூட்டம் நகர மன்றத்தில் நடந்தது. அதில், தமிழ்ப்பாடலுக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டது.

18.9.41இல் வேலூரில் சங்கீத சபா ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்துக்கு மிசிஷி அதிகாரி கி.ஷி.றி. அய்யர் தலைமை வகித்தார் அண்ணா-மலை நகரில் இயற்றிய தீர்மானத்தை-யொட்டி எழுந்துள்ள விவாதத்தில் மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க-வேண்டும் என்ற வழவழா கொழ-கொழா வேண்டுகோள் விடப்பட்டது. மேலும் கச்சேரிகளில் பாட தேர்ந்-தெடுக்கப்படும் பாடல்கள் எந்த மொழியில் இருந்தாலும், இசைக் கலை நுணுக்கத்தின் அடிப்படையில் பாடலைத் தேர்வு செய்து பாடலாம் என்று வேறு கூறப்பட்டது.

22.9.41இல் சென்னை நுங்கம்-பாக்கத்தில் தமிழிசைக் கலை மாநாடு நடைபெற்றது. அதில் ஜி. செங்கல்வ-ராயன், Dr. T.S. திருமூர்த்தி ஆகியோர் பங்கேற்று சிதம்பரம் தீர்மானத்தை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்கள். கச்சேரிகளில் பெரும் பகுதியில் தமிழ்ப்பாடல்களையே பாடுவதால், நிலையான புகழ்பெற்ற தியாகராஜர் அல்லது தீட்சிதர், மற்றும் வேறு மொழிப் பாடகர்களின் புகழுக்கு பாதகமோ அல்லது குந்தகமோ வந்துவிடாது என்றும் பேசினார்கள்.

இருள் நீங்கி ஒளி - பிலகரி ராகத்தில்

தமிழிசைப் புகழ் நிலைபெற போராட்டம் தொடர்ந்து நடந்து-கொண்டேயிருந்தது, போராட்டத்திற்கு 1946 இல்தான் ஒரு தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. 1943இல் உருவாக்கப்பட்ட தமிழிசை சங்க அமைப்பின் காரணமாக, கர்நாடிக் கச்சேரி மேடைகளில், தமிழ்ப் பாடல்களுக்கும், தமிழ் பாட்டு இயற்றுபவர்களுக்கும் நீண்டகாலமாக கிடைக்கப்பெறாமல் இருந்த பெருமை கிட்டியது. இறுதியில் வெற்றிகண்ட பல இனியத் தமிழ்ப் பாடல்களால் பொலிவு பெறும் வகையில் கர்நாடகப் பாடல்கள் தோற்றத்தைப் பெற்று வெளிச்சத்திற்கு வந்தது.

(25.8.2006 தேதி தி இந்து இதழில் வந்த கட்டுரையின் செய்தியின் அடிப்படையில் தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை)


ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோர் அதிகரிப்பு

இந்தியாவில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில், கடந்த 2006_07ஆம் ஆண்டு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை, 3,945 ஆகவும், 2007_08ஆம் ஆண்டு 4,205 ஆகவும் இருந்தது.

கடந்த 2008_09 ஆம் ஆண்டு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 4,750. இவ்வாறு ஆண்டுக்காண்டு ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 2009_10ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 5,826 ஆக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான விவேக் குமார் என்பவர் கூறியதாவது: ஜாதி மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் இனத்தவர்கள் இடையே எத்தனை ஜாதி மறுப்புத் திருணமங்கள் நடந்துள்ளன என்பதை கணக்கிட வேண்டும். சில பழைமை வாய்ந்த சமூகத்தில், தற்போதும் தீண்டாமை பழக்கம் நீடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில், சீர்த்திருத்த இயக்கங்கள் மூலம் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு விவேக் குமார் கூறினார்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 
Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai